ADDED : மே 29, 2026 06:01 AM

விருத்தாசலம்: தமிழக அரசை கண்டித்து, விருத்தாசலத்தில் அனைத்து விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50 ஆயிரம் பயிர்கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் விஜய் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல், 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும்; எனக்கூறி, விருத்தாசலம் பாலக்கரையில், கடலுார் மாவட்ட பாரம்பரிய விவசாயிகள் சங்கம், மாவட்ட நீரினை பாதுகாப்பு சங்கம் மற்றும் ஜனநாயக விவசாயிகள் சங்கம் ஆகிய சார்பில், தமிழக அரசை கண்டித்து, நேற்று மாலை 5:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.விவசாயிகள் சக்திவேல், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் முத்துவேல், முத்து, ஸ்டாலின், சத்தியமூர்த்தி, சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான விவசாய சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது, முதல்வர் விஜய் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல், விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றால், சாலைமறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
