/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
/
விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 21, 2025 05:58 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், நிலப்பட்டா கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சியில் 65 ெஹக்டேர் அரசு தரிசு நிலம் உள்ளது. இந்த இடத்தில் மலையடிக்குப்பம், பெத்தாங்குப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளையம் பகுதிகளை சேர்ந்தவர்கள் முந்திரி, வாழை உள்ளிட்ட பயிர்களை செய்து வருகின்றனர்.
தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க, இந்த இடத்தை அரசு கையகப்படுத்த முயல்வதை நிறுத்தக்கோரி, நேற்று முன்தினம் விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும், நேற்று முதல் விவசாயிகள் சங்கத்தினர், மலையடிக்குப்பத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். துரைராசு, தமிழ்செல்வன், பிரியா முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரவீந்திரன் துவக்கி வைத்து பேசினார்.
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு ரமேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் 5 தலைமுறையாக பயிர் செய்து அனுபவித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கிடவும், முந்திரி மரங்களை வேரோடு பிடுங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு நஷ்டஈடு வழங்கிட கோரி கோஷங்கள் எழுப்பினர்.

