UPDATED : அக் 18, 2026 04:20 PM
ADDED : அக் 18, 2026 04:17 PM

பண்ருட்டி: மகனை கொலை செய்த வழக்கில் தந்தையை புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை வாணீயம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். டைல்ஸ் தொழிலாளி; இவரது மனைவி தேன்மொழி,38; இவர்களுக்கு திருமணமாகி, 19 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள். இதில் மூத்த மகன் குணால், கடலுார், பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர்ந்து, இளங்கலை முதலாம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தாய் தேன்மொழியிடம் சண்டை போட்டு வந்தார். இந்நிலையில், கடந்த, 16 ம்தேதி வெங்கடேசன் வேலைக்கு போகாமல் துாங்கிகொண்டிருந்த குணாலை, ‘ஏன் வேலைக்கு செல்லாமல் துாங்குகிறாய்’ என கேட்டு கட்டையால் தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த குணால் உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்கு கடலுார் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
நேற்றுமுன்தினம் இரவு இறந்தார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் தேன்மொழி, கொடுத்த புகாரின்பேரில் வெங்கடேசன் மீது ஏற்கனவே கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த வழக்கை கொலைவழக்காக மாற்றி போலீசார் அவரை கைது செய்தனர்.
