/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குருவாயூர் ரயிலில் பார்சல் பெட்டிக்கு தாழிட்ட அவலம் விருதையில் பெண் பயணிகள் தவிப்பு
/
குருவாயூர் ரயிலில் பார்சல் பெட்டிக்கு தாழிட்ட அவலம் விருதையில் பெண் பயணிகள் தவிப்பு
குருவாயூர் ரயிலில் பார்சல் பெட்டிக்கு தாழிட்ட அவலம் விருதையில் பெண் பயணிகள் தவிப்பு
குருவாயூர் ரயிலில் பார்சல் பெட்டிக்கு தாழிட்ட அவலம் விருதையில் பெண் பயணிகள் தவிப்பு
ADDED : ஆக 16, 2025 03:26 AM

விருத்தாசலம்: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்சல் பெட்டியை உட்புறமாக தாழிட்டதால், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் பெண் பயணிகள் ஏற முடியாமல் தவித்தனர்.
சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி, திருச்செந்துார், குருவாயூர், கொல்லம், மதுரை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழக்கத்திற்கு அதிகமாக கூட்டம் முண்டியடித்தது.
சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16127), கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று மதியம் 1:57 மணிக்கு பதிலாக, 2:00 மணிக்கு வந்தடைந்தது. 2 நிமிடங்களில் புறப்பட வேண்டிய ரயிலில் 100க்கும் மேற்பட்டோர் ஏற முயன்றனர்.
ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணி கள் ஏற முடியாமல் தவித்தனர். அப்போது, இன்ஜின் பின்புறம் உள்ள பார்சல் பெட்டியில் பயணிகளை ஏற்றி விடலாம் என, ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் முயன்ற போது, அதிலிருந்த பயணி கள் சிலர் உட்புறமாக தாழிட்டுக் கொண்டனர்.
எவ்வளவு முயன்றும் பார்சல் பெட்டியை திறக்க முடியவில்லை. பின்னர், முண்டியடித்தபடி, பெண்கள் சிறப்பு பெட்டியில் ஏறி, படியில் நின்றபடி பயணிக்கும் அவலம் ஏற்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த ரயில்வே போலீசார், பார்சல் பெட்டியின் வெளிப்புறத்தை இரும்பு கம்பியால் கட்டினர்.
பின்னர், அரியலுார், திருச்சி உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பணியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து, பார்சல் பெட்டியை திறக்க முயற்சிக்கும் நபர்களை விசாரித்து, எச்சரித்து அனுப்புமாறு அறிவுறுத்தினர்.
இந்த சம்பவத்தால்,4 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2:06 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.

