ADDED : மே 04, 2025 04:16 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பட்டாசு கடை நடத்தப்படும் இடங்களை தீயணைப்பு நிலைய அதிகாரி கவிதா ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு கடை நடத்த உரிமம் பெற வேண்டி வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பார்கள்.
பட்டாசு கடை நடத்தப்படும் இடங்களை வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து அந்தந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட ஆர்.டி.ஓ.,விடம் பரிந்துரை செய்வர்.
பின், ஆர்.டி.ஓ., பார்வையிட்டு பரிந்துரை செய்யும் வியாபாரிகளுக்கு மட்டும் பட்டாசு கடை நடத்த கலெக்டர் அனுமதி அளிப்பது வழக்கம். கடலுார் வருவாய் கோட்டத்தில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு கடை நடத்த விண்ணப்பித்த பல இடங்கள் விதிமுறைகளை மீறி இருந்ததால் ஆர்.டி.ஓ.,அனுமதி வழங்கவில்லை.
இதனால் பட்டாசுகளை சரியாக விற்க முடியாமல் வியாபாரிகள் நஷ்டம் அடைந்தனர். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க தீபாவளிக்கு பல மாதங்கள் இருக்கும் போதே, பட்டாசு கடை நடத்த உரிமம் பெற வியாபாரிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, நெல்லிக்குப்பத்தில் பட்டாசு கடை நடத்த உள்ள இடங்களை தீயணைப்பு நிலைய அதிகாரி கவிதா ஆய்வு செய்தார்.
