வீராணம் ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
வீராணம் ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 17, 2026 08:06 PM
சிதம்பரம்: வீராணம் ஏரிக்குள், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ளது, வீராணம் ஏரி. காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் ஏரியின் மூலம், 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
அதே சமயம் சென்னை மக்களின் தாகம் தீர்க்க வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கப்பட்டு, குடிநீருக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது இந்த ஏரி, குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. லால்பேட்டை பகுதியின், ஏரியின் உள் பகுதியில் பல்வேறு இடங்களில், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
பல பகுதிகளில் ஏரியின் உள் பகுதி ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகள், தண்ணீருக்குள் சென்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. ஏரியின் மேல் கரை பகுதி முழுவதும் காட்டு கருவை மரங்கள் மற்றும் பல்வேறு செடிகள் அடர்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக, வீராணம் ஏரிக்கரை சாலையின் ஒரு பகுதியில், லால்பேட்டை பேரூராட்சியின், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
வெளிப்பகுதியில் இருந்து மேட்டில், குப்பைகளை கொட்ட வரும் பொதுமக்கள் பலர், வீராணம் ஏரியின் தண்ணீர் படிப்பு பகுதிகளான, ஏரியின் உள் பகுதியிலும் குப்பைகளை கொட்டி விடுகின்றனர்.
வீராணம் ஏரிக்குள் குப்பைகள் கொட்டி, தண்ணீர் மாசுபடுவதை தடுப்பதோடு, ஏரிக்கரையில் பேரூராட்சி குப்பைகள் கொட்டும் பகுதியையும் இடம் மாற்ற செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
