ADDED : மார் 20, 2026 07:49 AM

சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரி அருகே புதர் மண்டி கிடந்த கோதாவரி வாய்க்கால் துார் வாரும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்கு டியில் துவங்கி, குமாரக்குடி, கோதண்டவிளாகம், நங்குடி, வட்டத்துார், குடிகாடு, புடையூர், சோழத்தரம், வானமாதேவி வரை, 10 கி.மீ., துாரம், வீராணம் ஏரி மேல்கரை அருகே கோதாவரி வடிகால் வாய்க்கால் உள்ளது.
வாய்க்கால் துார்வாரி, 10 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், தமிழக முதல்வர் அறிவிப்பின் கீழ் ரூ.63 கோடி, வீராணம் ஏரி பாசன வாய்க்கால் துார்வாரும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் வீராணம் ஏரியில் உள்ள மதகுகள், ஷட்டர் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய ஷட்டர் மதகு கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன.
கோதாவரி வாய்க்கால் முழுவதும் சீமை கருவேல முட்புதர்கள் காடாக வளர்ந்துள்ளதை இயந்திரம் கொண்டு வேரோடு அப்புறப்படுத்தி வாய்க்காலில் துார்ந்துள்ள மண்ணை வெட்டி கரையில் போட்டு ப லப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல காட்டுமன்னார்கோவில் பகுதி வடிகால் மற்றும் பாசனத்திற்கு வெள்ளியங்கால் ஓடையில் இருந்த புதர்களையும் அப்புறப்படுத்தி கரையை பலப்படுத்தி வருகின்றனர். வாய்க்கால்களை பொதுப்பணித்துறை, நீர்பாசனத்துறையினர் துார்வாரி சுத்தம் செய்து வருகின்றனர்.
கோதாவரி வாய்க்காலில் புதர்மண்டியுள்ள சீமை கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை, துார்ந்துள்ள மண்ணை வெட்டி கரையில் போட்டு பலப்படுத்தி வருகின்றனர். கோதாவரி வாய்க்கால் துார்வாரும் பணியினை பொதுப்பணித்துறை சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்தனர்.
