/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆளுங்கட்சி மாநாடுகளுக்கு அரசு பஸ்கள் இயக்கம் வழக்கமான வழித்தடங்களில் பயணிகள் பாதிப்பு
/
ஆளுங்கட்சி மாநாடுகளுக்கு அரசு பஸ்கள் இயக்கம் வழக்கமான வழித்தடங்களில் பயணிகள் பாதிப்பு
ஆளுங்கட்சி மாநாடுகளுக்கு அரசு பஸ்கள் இயக்கம் வழக்கமான வழித்தடங்களில் பயணிகள் பாதிப்பு
ஆளுங்கட்சி மாநாடுகளுக்கு அரசு பஸ்கள் இயக்கம் வழக்கமான வழித்தடங்களில் பயணிகள் பாதிப்பு
ADDED : ஜன 30, 2026 06:41 AM
- நமது நிருபர் -: அரசியல் கட்சிகளின் மாநாடு என்றாலே ஆயிரக்கணக்கில் தொண்டர்களை திரட்டி, எதிர்க்கட்சிகளுக்கு தங்களின் செல்வாக்கை நிரூபிப்பது வழக்கம். இதற்காக கிராமங்களில் இருந்து ஏராளமான தொண்டர்களை திரட்டுவதுடன் தினக்கூலிகளுக்கு வேட்டி, சட்டை, புடவைகளை முன்கூட்டியே வழங்கி, அவர்களை தங்களின் கட்சித் தொண்டர்களாக மாற்றி அழைத்து செல்வர்.
மாநாட்டில் ஆண்களுக்கு உ.பா.,வுடன் பிரியாணி, பெண்களுக்கு ரொக்கம் வழங்குவர். இதனால் எந்த கட்சி மாநாடாக இருந்தாலும் அதிரடியாக கூட்டம் திரளுவது வாடிக்கையாகி விட்டது.
இதுபோன்ற நாட்களில் தனியார் பஸ்கள் மற்றும் வேன், கார் போன்றவை பயன்படுத்தப்பட்ட நிலை மாறி, அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்துச் செல்வது தொடர்கிறது.
குறிப்பாக ஆளுங்கட்சி மாநாடு என்றாலே ஒவ்வொரு அரசு பணிமனையில் இருந்தும் 10 முதல் 30 பஸ்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பஸ்களை மாநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, குறிப்பிட்ட வழித்தடங்களில் போக்குவரத்தை நிறுத்தி விடுகின்றனர்.
இதுபோன்ற காலங்களில் பஸ் வசதியின்றி பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அதுபோல், தி.மு.க., மகளிரணி சார்பில் தஞ்சையில் நடந்த டெல்டா மாநாட்டிற்கு, கடலுார் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்தும் அரசு பஸ்கள் அதிகளவில் எடுத்துச் செல்லப்பட்டன. குறிப்பாக விருத்தாசலம், திட்டக்குடி பணிமனைகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பஸ்கள், தஞ்சாவூர் மாநாட்டிற்கு புறப்பட்டன.
ஒவ்வொரு பஸ்சிலும் 50 முதல் 60 பெண்கள், கருப்பு சிவப்பு சீருடையிலான புடவையில் அழைத்து செல்லப்பட்டனர். பார்வையாளர்கள் மத்தியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பஸ்களில் சென்றதாக பேசப்பட்டது. ஆனால், இந்த பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடங்களில் பல மணி நேரம் காத்திருந்து பயணிகள் அவதியடைந்தது, யாருடைய பார்வைக்கும் எட்டவில்லை.
மக்கள் தொகை பெருக்கமடைந்துள்ள நிலையில், கூடுதலாக பஸ் இயக்கம் இல்லாவிட்டாலும், இதுபோன்ற அசவுகரிய செயல்களை தவிர்க்கலாம். வழக்கமான பஸ் இல்லாமல், அதற்கடுத்து வந்த பஸ்களில் பயணிகள் முண்டியடித்துச் செல்லும் அவலம் ஏற்பட்டது.
அரசு பஸ்களை வாடகைக்கு விடுவதால், போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் கிடைக்கும் என்றாலும், அந்த வழித்தடங்களில் தவிக்கும் பயணிகளின் நிலை கேள்விக்குறியாகிறது.
அதனால் அரசு பஸ்களை மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடுவதை போக்குவரத்துக் கழகம் தவிர்க்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

