ADDED : மார் 16, 2026 03:16 AM
கடலுார்: கடலுாரில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு எழுத வந்தவர் தப்பியோடியது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-2 தேர்வு கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் நேற்று நடந்தது. காலையில் நடந்த தேர்வை 315 பேர், மதியம் நடந்த தேர்வை 322 பேர் என, மொத்தம் 637 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலையில் தேர்வு துவங்கும் முன்பாக, அறை கண்காணிப்பாளர் விஜயகுமார், தேர்வர்களிடம் வினாத்தாள் வழங்கினார். அப்போது, விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த குமாரகுப்பத்தைச் சேர்ந்த 37 வயது நபர், பதற்றமாக இருப்பதை கண்டு விசாரித்தார்.
உடன், அந்த நபர் கையில் மறைத்து வைத்திருந்த எலக்ட்ரானிக் சாதனத்தை எடுத்துக் கொண்டு வினாத்தாளையும், நுழைவு சீட்டையும் அறையில் வைத்து விட்டு தப்பியோடினார்.
இதுகுறித்து முதன்மை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், கடலுார் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.
