/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மோசடி வழக்கில் வாலிபருக்கு 'குண்டாஸ்'
/
மோசடி வழக்கில் வாலிபருக்கு 'குண்டாஸ்'
ADDED : டிச 22, 2024 07:03 AM

கடலுார் : மோசடி வழக்கில் சிறையில் உள்ள குறிஞ்சிப்பாடி வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் சதீஷ்குமார், 26; இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை, குறிஞ்சிப்பாடி, பெரிய கண்ணாடி கிராமத்தை சேர்ந்த கவுதமன்,34; என்பவர், மாதம் 24,000 ரூபாய் வாடகைக்கு கேட்டார்.
சதீஷ்குமார் ஒத்துக்கொண்டதால், கடந்த அக்., 28ம் தேதி கவுதமன் மற்றும் அவரது நண்பர்கள் வடலுார் ஜான் விக்டர்,42; ஆடூர் அகரம் சிராஜ்,35; சிவராமன்,35; ஆகியோர், வாகனத்தை வாடகைக்கு எடுத்து செல்வதற்காக போலி ஆவணம் தயாரித்து கையெழுத்திட்டு சதீஷ்குமாரிடம் வழங்கினர்.
பின், சதீஷ்குமாரிடம் சரக்கு வாகனத்தின் அசல் பதிவு சான்றுகளையும், வாகனத்தையும் வாங்கிச் சென்று, திருப்பி தராமல் மோசடி செய்தனர்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில் சதீஷ்குமார் புகார் செய்ததை தொடர்ந்து, கவுதமன் உட்பட 4 பேரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில், கவுதமன் மீது குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, காடாம்புலியூர் ஆகிய காவல் நிலையங்களிலும், மாவட்ட குற்றப்பிரிவிலும் 5 மோசடி வழக்குகள் உள்ளன.
இவரது தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராமின் பரிந்துரையேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதற்கான உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் கவுதமனிடம் போலீசார் வழங்கினர்.