/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காரில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்
/
காரில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்
ADDED : ஏப் 13, 2025 04:10 AM

விருத்தாசலம் : பெங்களூருவில் இருந்து காரில் குட்கா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் உள்ளிட்ட போலீசார், விருத்தாசலம்-உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில், நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, டி.என்.47-பி.ஒய்.6464 பதிவெண் கொண்ட கியா கார் நிற்காமல் சென்றது. , வயலுார் ரயில்வே மேம்பாலம் அருகே லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
காரை ஓட்டி வந்த மர்ம நபர், வலதுபுறமாக காரை திருப்பியபோது, பின்னால் வந்த போலீஸ் ஜீப்பில் மோதி, முன்புற டயர் வெடித்து தறிகெட்டு ஓடி நின்றது. உடன், காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் தப்பினார். காரில் 390 கிலோ எடையில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், 26 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று மாலை பார்வையிட்டு, போலீசாரை பாராட்டினார். பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூருவில் இருந்து 6 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தி வந்த நபரை இன்று (நேற்று ) இரவுக்குள் கைது செய்து விடுவோம்.
கடந்த 3 மாதங்களில் 1,300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 131 வழக்குககளில் 186 பேர் கைதாகினர். அதில், 3 குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ராமநத்தம் கள்ளநோட்டு விவகாரத்தில், வடமாநிலத்தில் பதுங்கிய முக்கிய குற்றவாளியை கைது செய்ய 2 தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
அவருக்கு உதவியாக இருந்த நபரை சென்னையில் கைது செய்துள்ளோம். இதில் அரசியல் தலையீடு ஏதுமில்லை. மோசடி செய்ய 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தியுள்ளார். அவர் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம். விரைவில் பிடிபடுவார்' என்றார்.

