UPDATED : ஜூன் 16, 2026 07:52 PM
ADDED : ஜூன் 16, 2026 07:51 PM

வேளாண் தொழிலுக்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவு தொழில் ஏராளமானோரின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. கால மாற்றத்தால் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு, புதுப்பேட்டை, கடலுார் சுற்றுப்பகுதிகளான புருகீஸ்பேட்டை, வண்டிப்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் சொற்ப அளவிலான கைத்தறி தொழிலாளர்கள் இன்னும் கைத்தறி தொழிலை செய்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் வாழ்ந்த இப்பகுதிகளில் தற்போது, வேறு தொழில் தெரியாத, செய்ய இயலாத தொழிலாளர்கள் மட்டுமே தற்போது கைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். வளைகுடா போர், பாவு நுால் பற்றாக்குறை, நுால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைத்தறி நெசவு தொழிலில் உள்ளோரின் வருமானம் தற்போது தடைபடுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கைத்தறி தொழிலாளர்கள் கூறியதாவது:
கைத்தறி தொழிலில் எஞ்சியுள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகளை கடந்த பல ஆண்டுகளாக யாருமே கண்டுகொள்ளவில்லை.
குறிஞ்சிப்பாடி கைத்தறி துணிகள் ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்று முன்னர் விற்பனையான நிலையில், தற்போது நலிவடைந்துள்ளது.
நெசவுத் தொழில் செய்யும் சொற்ப கைத்தறி தொழிலாளர்கள் இத்தொழிலை விட்டு வெளியேறாமல் இருக்க, புதிய அரசு, தனி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
