/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டல்கள் சங்கத்தினர் கடலுார் மேயரிடம் மனு
/
ஓட்டல்கள் சங்கத்தினர் கடலுார் மேயரிடம் மனு
ADDED : செப் 25, 2024 11:04 PM

கடலுார் : திடக்கழிவு மேலாண்மை சேவை வரி உயர்த்தியது தொடர்பாக, கடலுார் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம், ஓட்டல் உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் ஓட்டல்கள் சங்கம் சார்பில் ஆனந்தபவன் உரிமையாளர் ராம்கி நாராயணன் கொடுத்துள்ள மனு:
கடலுார் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சேவை வரி 2017 முதல் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டதாக கூறி, 2023-24ம் நிதியாண்டில் நோட்டீஸ் அனுப்பினர். 2017ம் ஆண்டு முதல் 2024 வரை, அனைவரும் திடக்கழிவு மேலாண்மை வரி செலுத்தி இருக்கிறோம்.
ஆனால், தற்போது கடலுார் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை சேவை வரியை நாள் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் செலுத்த வேண்டும் எனவும், அதை பின் தேதியிட்டு 2017ம் ஆண்டு முதல் 2025 நடப்பு ஆண்டு வரை ரூ. 13 லட்சத்து 27 ஆயிரத்து 492 செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்துள்ளது.
நாளொன்றுக்கு ரூ. 500 செலுத்துவது இயலாது. அப்படி பார்த்தால் ஒவ்வொரு ஓட்டலும் ஆண்டிற்கு ரூ. 1.80 லட்சம் செலுத்த வேண்டும். அதை இன்றைய சூழலில் எங்களால் செலுத்த இயலாது. வேறு எந்த மாநகராட்சியிலும் நாளொன்றிற்கு என வரியை கணக்கிடவில்லை. மாதாந்திரம் கணக்கிடுகின்றனர். இது தொடர்பாக 3ம் தேதி மாநகராட்சி கமிஷனரை சந்தித்து கூறியுள்ளோம்.
இதில், மாநகராட்சி மேயர் தலையிட்டு, ஓட்டல் உணவக தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, துணை மேயர் தாமரைச்செல்வன், சுப கிராண்ட் உரிமையாளர் ஆத்மலிங்கம், தேவி ஓட்டல் உரிமையாளர் முருகன், பல்லவா ஓட்டல் உரிமையாளர் சிவக்குமார், தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் வெற்றிவேல், முனியாண்டி விலாஸ் உரிமையாளர் கார்த்திக், அபிராமி ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீராம் உடனிருந்தனர்.