ADDED : மே 15, 2026 04:01 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மழையால் தொகுப்புவீடு இடிந்து விழுந்த நிலையில், மூதாட்டி காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விருத்தாசலம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், கடந்த 1996ல் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. இந்த வீடுகள் பராமரிப்பின்றி, விரிசல் விழுந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.
இந்நிலையில், வெங்க டேசன் மனைவி பசுரதம் என்ற மூதாட்டி வீடு, சமீபத்தில் பெய்த மழைக்கு சேதமடைந்த நிலையில் இருந்தது. நேற்று முன்தினம் வீட்டின் முன்புறம் மூதாட்டி துாங்கிய நிலையில், அதிகாலையில் வீட்டின் சுவர், மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, மூதாட்டி எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
