மழைநீர் சேகரிப்பை செயல்படுத்துவது எப்படி? கலெக்டர் விளக்கம்
மழைநீர் சேகரிப்பை செயல்படுத்துவது எப்படி? கலெக்டர் விளக்கம்
UPDATED : நவ 17, 2026 10:16 PM
ADDED : நவ 17, 2026 10:16 PM
கடலுார்: ‘மக்கள் இயக்கமாக செயல்பட்டால் மட்டுமே மழைநீர் சேகரிப்பை சிறப்பாக செயல்படுத்த முடியும்’ என,
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலுார், வண்ணாரப்பாளையம், காமராஜர் நகர் பகுதியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
அப்பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழை நீர் சேகரிப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தினை துவக்கி வைத்தார்.
பின்னர் கடலுார் மாநகராட்சிக்கு உட்பட்ட சீத்தாராம் நகர், கே.டி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிநபர் இல்லங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:
பொதுவாக மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் அரசு அலுவலங்களில் நடத்தப்படும். ஆனால், இக்கூட்டம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாகச் சென்று நடத்தப்படுவது வித்தியாசமான முயற்சியாகும். இதற்கு காரணம், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை அரசு அலுவலகங்களில் மட்டும் ஏற்படுத்தினால் குறைந்த அளவிலான நீரினை மட்டுமே சேமிக்க முடியும்.
தனியார் கட்டடங்களிலும் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி, மழைநீரை சேமிக்க வேண்டும். ஒரு சில கட்டடங்களில் மட்டும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதால் எதிர்பார்க்கும் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியாது. ஒவ்வொரு தனிநபரும், தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கமாகச் செயல்பட்டால் மட்டுமே மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும்.
கடலுார் மாநகராட்சியை மாநிலத்திலேயே மழைநீர் சேகரிப்பில் சிறந்த மாநகராட்சியாக உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷ்னர் கிஷன்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
