தேவையான திட்டங்களை கொண்டு வருவேன்: தி.மு.க., வேட்பாளர் சரவணன் உறுதி
தேவையான திட்டங்களை கொண்டு வருவேன்: தி.மு.க., வேட்பாளர் சரவணன் உறுதி
ADDED : ஏப் 16, 2026 07:01 PM

பரங்கிப்பேட்டை: புவனகிரி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட பூதவராயன்பேட்டை, பு.மணவெளி, ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம், மருதுார், சொக்கன்கொல்லை, சாத்தப்பாடி, தெற்குத்திட்டை உட்பட, 23 கிராமங்களில் நேற்று புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
புவனகிரி தொகுதியில் கடந்த, 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் நான் வெற்றி பெற்று தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன்.
கடந்த, 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட்டேன். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், சரியான முறையில் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாமல் போனது. இதனால், வெற்றிவாய்ப்பை இழந்தேன்.
அப்போது, தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்தது. நான் எம்.எல்.ஏ., வாக இருந்திருந்தால், தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து இருப்பேன்.
மக்களுக்கு உழைக்க மீண்டும் போட்டியிடுகிறேன். தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். என்னை வெற்றிப்பெற செய்ய நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அவருடன், முன்னாள் எம்.எல்.ஏ., மல்லிகா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், வி.சி.க., மண்டல செயலாளர் செல்லப்பன், தொகுதி பொறுப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
