முந்திரி சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி
முந்திரி சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி
ADDED : செப் 16, 2026 07:25 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், முந்திரி சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
திருச்சி துவாக்குடி தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் நடந்த பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். அதில், கடலுார் மாவட்டத்திற்கு ஏற்ற அதிக மகசூல் தரும் முந்திரி ரகங்கள், முந்திரி கன்றுகள் தேர்வு செய்யும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தோட்டக்கலைத்துறை பேராசிரியர் சிவசங்கர், முந்திரியில் ஒட்டு கட்டுதல் செய்முறை பயிற்சி மற்றும் முந்திரி மரங்களை தாக்கும் தண்டு துளைப்பான், தேயிலை கொசு தாக்கம், அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சியளித்தார்.
பேராசிரியர் கலைச்செல்வி, முந்திரி மரங்களின் இடையில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்து வருமான இரட்டிப்பு பெறுதல், களை மேம்பாடு குறித்து விளக்கமளித்தார். பேராசிரியர் கமலக்கண்ணன் உர மேளாண்மை மற்றும் மண்வளம் பாதுகாப்பு குறித்து பேசினார்.
பேராசிரியர் சத்யநாராயணன் முந்திரி பொருட்களில் மதிப்புக்கூட்டுதல் தயாரிப்பு குறித்து பேசினார். பேராசிரியர் சுஜய்வேலு, வேளாண் விரிவாக்க அலுவலர்கள், வேளாண் அறிவியல் நிலைய உதவியாளர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
