ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது.. அவசியம்:100 சதவீத பாதுகாப்பு வழங்க எதிர்பார்ப்பு
ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது.. அவசியம்:100 சதவீத பாதுகாப்பு வழங்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 25, 2026 11:07 PM

வேப்பூர்: கிராமப்புற ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, 100 சதவீத பாதுகாப்பு வழங்க வேண்டுமென தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்., 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், தேர்தல் பறக்கும் படை குழுவினரை நியமனம் செய்து பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
மாவட்டத்தில் 2 ஆயிரத்து 333 ஓட்டுச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட்டீன.
அதன்படி, 1,200 ஓட்டுகளுக்கு மேலுள்ள மையங்களை இரண்டாக பிரித்து, 2 ஆயிரத்து 590 ஓட்டுச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட்டன.
அதில், 69 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 13 ஓட்டுச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டன.இந்நிலையில், மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களை உள்ளடக்கிய விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி (தனி) தொகுதிகள், போதிய போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளின்றி உள்ளன.
இங்கு, வெளியூரிலிருந்து நியமிக்கப்படும் தேர்தல் அலுவலர்கள் முதல் நாளே சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று, ஓட்டுப்பதிவுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வது வழக்கம். இதற்காக, தேர்தல் அலுவலர்கள் ஒரு நாள் இரவு முழுவதும் ஓட்டுச்சாவடிகளில் தங்க வேண்டியுள்ளது.
இந்த பணிக்கு பெண் அலுவலர்களும் நியமிக்கப்படுவதால் அவர்கள் தங்குவதற்கு தேவையான ஓய்வறை, கழிப்பறை, குடிநீர், மின் விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய கடமை.
தொகுதிகள் தோறும் நகர்ப்புற அரசு பள்ளி வளாகங்களில் போதிய அடிப்படை வசதிகள் இருந்தாலும், கிராமப்புற அரசு பள்ளிகளிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளின்றியும், சுகாதார பராமரிப்பின்றியும் காணப்படுகின்றன.
இதனால், பெண் அலுவலர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. மேலும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வு தளம் இல்லாமலும், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி காணப்படுகிறது.
நகரங்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமப்புற ஓட்டுச்சாவடிகளிலும் சுகாதார வளாகம், குடிநீர், ஓய்வறை, சாய்வு தளம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை கள ஆய்வு செய்து, சேதமடைந்த ஓட்டுச்சாவடி மையங்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து புனரமைக்க வேண்டும். மேலும், பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசாரை நியமித்து, 100 சதவீத பாதுகாப்பு வழங்க வேண்டுமென தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
