/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 12 ஆயிரம் மூட்டைகள் வந்தன
/
விருதை மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 12 ஆயிரம் மூட்டைகள் வந்தன
விருதை மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 12 ஆயிரம் மூட்டைகள் வந்தன
விருதை மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 12 ஆயிரம் மூட்டைகள் வந்தன
ADDED : ஜூலை 30, 2024 05:29 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் குறுவை நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளதால், மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், கம்பு, வரகு, உளுந்து, வேர்க்கடலை, கரும்பு, எள், பருத்தி உட்பட தானிய வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுபோல், தோட்டக்கலைப் பயிர்களான காய்கறிகள், பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.
இவற்றில் நெல், உளுந்து, வேர்க்கடலை, மக்காச்சோளம், எள், ஆமணக்கு, தேங்காய் பருப்பு, தட்டைப்பயறு உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன.
மாவட்டத்தில் மிகப்பெரிய கமிட்டியாக இது செயல்படுகிறது. இங்கு, குறித்த நேரத்தில் பணப் பட்டுவாடா, கூடுதல் இட வசதி, உடனுக்குடன் கொள்முதல் செய்வது போன்ற வசதிகள் இருப்பதால் கடலுார் மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பயனடைகின்றனர்.
சீசன் காலங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மூட்டைகள் விற்பனைக்கு வருவதால், 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். வெளியூர்களில் இருந்து வரும் விவசாயிகள் ஓய்வெடுக்க வசதியாக காத்திருப்பு கூடங்கள், கழிவறைகள், கேன்டீன் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
மேலும், விளைபொருட்கள் மழையில் நனையாமல் இருக்க கமிட்டி வளாகத்தில் பரிவர்த்தனை கூடங்கள், 15 கோடியில் மல்டி லெவல் குடோன் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து தரப்பட்டுள்ளன. அதுபோல், ஈரப்பதமான பொருட்களை உலர்த்தி எடைபோட வசதியாக உலர்களங்களும் உள்ளன.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக குறுவை நெல் அறுவடை தீவிரமடைந்து, கமிட்டிக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதில், அதிகபட்சமாக நேற்று முன்தினம் இரவு முதல், 12 ஆயிரம் நெல் மூட்டைகள் ஒரே நாளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
அதன்படி, நேற்று 12 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக எள் 11,309 ரூபாய்க்கும், உளுந்து 8,759, வேர்க்கடலை 7,699 மற்றும் நெல் பி.பி.டி., ரகம் 2,350 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன.
விளைபொருட்களை தரம் பிரித்தல், எடைபோடுதல், சாக்கு மாற்றுதல் என, வழக்கத்திற்கு மாறாக மார்க்கெட் கமிட்டி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
வருங்காலங்களில் நெல் மூட்டைகள் வரத்து அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப கமிட்டி அலுவலர்களும், வியாபாரிகளும் தயாராகி வருகின்றனர்.