ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு துவக்கம்
ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஏப் 30, 2026 03:23 AM

கடலுார்: ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இன்று முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள, 9 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உரிய ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசுக் கலைக்கல்லுாரி; நெய்வேலி மற்றும் பண்ருட்டி தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலை வளாகம்; கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடலுார் பெரியார் அரசுக் கலைக்கல்லுாரி; புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சி.முட்லுார் அரசு கலைக்கல்லுாரி; ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மையங்களும், காவல்துறையினரின் முழு கண்காணிப்பில் உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி ஓட்டு எண்ணிக்கை பணிக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ள பணியாளர்களை, கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி கடந்த, 28ம் தேதி நடந்தது. கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 126 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்த 20 சதவீதம் கூடுதல் பணியாளர்களுடன் நுண் பார்வையாளர்கள் 153, கண்காணிப்பாளர்கள் 153, உதவியாளர்கள் 153, என மொத்தம் 459 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இன்று முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
