/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிவாரணம் வழங்கியதில் குளறுபடி: குறைகேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு
/
நிவாரணம் வழங்கியதில் குளறுபடி: குறைகேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு
நிவாரணம் வழங்கியதில் குளறுபடி: குறைகேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு
நிவாரணம் வழங்கியதில் குளறுபடி: குறைகேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : மார் 22, 2025 07:08 AM

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பருவம் தவறிய மழையால் பாதித்த பயிர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கவில்லை என விவசாயிகள் பேசினர்.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், உட்கோட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் செல்வமணி வரவேற்றார். விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:
சக்திவேல்:வெள்ள பாதிப்பு இல்லாததால், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியாது என அதிகாரிகள் கூறுவது தவறு. பருவம் தவறிய மழையால் விளைபொருட்கள் மகசூல் பாதித்துள்ளது.
இதனால் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தும், முறையாக நிவாரணம் கிடைக்கவில்லை.
திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் தாலுகாவில் 30 சதவீத விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணம் வழங்கியதில் குளறுபடி நடந்துள்ளது.பொதுப்பணித்துறை சார்பில் விருத்தாசலத்தில் 38 கோடி ரூபாயில் உபரிநீர் வடிகால் ஓடை துார்வாரும் பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக துார்வாரினால் இரண்டு தலைமுறை விவசாயிகள் பயனடைவர்.
கருணாகரன்:தர்மநல்லுார் காலனி மயானம் வழியாக செல்லும் பாதையை பயன்படுத்தி, 200 ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடியாகும் விளைபொருட்கள் எடுத்து வரப்படுகின்றன.
இந்த சாலையை சீரமைக்க மனு கொடுத்த போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்திருந்தார்.
ஆனால், கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் மூலம் பல லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்படடதாக தவறான தகவல் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கலெக்டர் நேரடியாக விசாரணை நடத்தி, தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட வயலுாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மனு கொடுத்து பல நாட்களாகியும் நடவடிக்கை இல்லை. விவசாயிகள் நலன் கருதி கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும்.
கலியபெருமாள்: வேளாண் பொறியியல் துறையின் மானியத்தில் இருப்பு உள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் குறித்த விபரங்களை நோட்டீஸ் போர்டில் தெரியப்படுத்தவேண்டும்.
இதற்கு ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் பதிலளித்து பேசுகையில், 'அனைத்து துறைகளின் கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறைகள் வாயிலாக விரைவில் சீரமைத்து தரப்படும்' என்றார்.