ADDED : ஏப் 09, 2026 06:08 AM

சேத்தியாத்தோப்பு: வெள்ளாறுராஜன் வாய்க்காலில் இருந்த புல், புதர்கள், சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி துார்வாரும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வைத்து, ஏ.டி.சி., மதகினை திறந்து,வெள்ளாறுராஜன் வாய்க்காலில் பாசனத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
ஒவ்வொரு சம்பா பருவத்தின் போது புவனகிரி, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை வரை பாசனத்திற்கு தண்ணீர் வெள்ளாறுராஜன் வாய்க்காலிலிருந்து,பாசன மதகுகள் திறந்து அனுப்பி வருகின்றனர்.
வெள்ளாறுராஜன் வாய்க்கால் துார்வாரி கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலானது.
கனிம வள நிதியில் மாவட்டத்தில் பல்வேறு பணிகள்நடந்து வரும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளின் கோரிக்கையையேற்று மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கியது.
கடந்த சில தினங்களாக, சேத்தியாத்தோப்பு பாசனப்பிரிவு அலுவலக கட்டுப்பாட்டில் வெள்ளாறுராஜன் வாய்க்கால் முழுவதும் உள்ள புல், புதர்கள், கரையோரத்தில் இருக்கும் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி துார்வாரி வருகின்றனர்.
துார்வாரும் பணியினை சிதம்பரம் உட்கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவிபொறியாளர் சிவராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
