/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுாற்றாண்டை கடந்த கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
/
நுாற்றாண்டை கடந்த கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
நுாற்றாண்டை கடந்த கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
நுாற்றாண்டை கடந்த கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
ADDED : ஜூன் 14, 2025 11:29 PM

பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சாவரம் சுற்றுலா மையம் அருகே அமைந்துள்ளது கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளி 1922ம் ஆண்டு நவ., 11ம் தேதி துவக்கப் பள்ளியாக துவங்கப்பட்டது.
104ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இப்பள்ளியில் பலர் பயின்றாலும், இங்கேயே பயின்று, இப்பள்ளிக்கே தலைமை ஆசிரியர்களாக தங்கராஜ், வீரபாண்டியன் ஆகியோர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக வேதரத்தினம் பணிபுரிகிறார். கடந்த 2005ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு படித்த முன்னாள் மாணவர்கள், பொறியாளர், நீதித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கலைமணி இப்பள்ளியில் பயின்றார்.
138 மாணவர்கள் படிக்கின்றனர். காற்றோட்டமான வகுப்பறை, நவீன கரும்பலகை, 27 கணினி வசதியுடன் கணித ஆய்வகம், ஹைடெக் லேப், குடிநீர் என, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளியாக திகழ்கிறது.
கடந்த 2015ம் ஆண்டு மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருது, 2017ம் ஆண்டு துாய்மை பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. 2015ம் ஆண்டு தலைமை ஆசிரியர் வேதரத்தினத்திற்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்தது.
இவர், மாவட்ட ஊர்க்காவல் படையில் கோட்ட தளபதியாக பதவி வகிக்கிறார். இவரின் சேவையை பாராட்டி மத்திய உள்துறை அமைச்சகத்தின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையில் வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
கடந்த ஏப்., மாதம் பள்ளியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த நுாற்றாண்டு விழாவில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
கிராம மக்கள் சார்பில், பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் சீர்வரிசை பொருட்களாக வழங்கப்பட்டது.
இப்பள்ளியின் கட்டடத்தை சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் புனரமைப்பு செய்ய வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது
முன்னாள் அமைச்சர் கலை மணி கூறியதாவது:
இப்பள்ளியில் ஆரம்ப கல்வியை துவங்கினேன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங் என, மூன்று பாடப்பிரிவுகள் மட்டுமே இருந்த காலத்தில், கடந்த 1962ம் ஆண்டு பொறியியல் படித்து, பட்டதாரி ஆனேன்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, தமிழக அரசின் அமைச்சராக பதவி வகித்தேன். கிள்ளை பேரூராட்சி தலைவராக பதவி வகித்த போது, பிச்சாவரம் சுற்றுலா மையம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டேன்.
எனது மனைவி இந்திராணியும், இப்பள்ளியில் படித்து கீரப்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்.
இங்கு கல்வி கற்று பொறியியல் பட்டதாரி, அமைச்சர் என தகுதியை பெற்றுக் கொடுத்த பள்ளியை என்றென்றும் நினைவு கூறுவேன்.
தொழில் வளர்ச்சிக்கு உதவியது
சத்தியமூர்த்தி கூறியதாவது:
இங்கு, 5ம் வகுப்பு வரை படித்தேன். ஆரம்ப காலத்தில் இப்பள்ளியில் கணித பாடத்தில் நான் பெற்ற மதிப்பானது என்னுடைய தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. இங்கு கற்ற கல்வி, அடிப்படை ஒழுக்கம், விடாமுயற்சி ஆகியவை என்னை சிதம்பரம் நகரத்திற்கு புலம் பெயர்ந்து சுய தொழில் செய்யும் அளவுக்கு உறுதுணையாக இருந்தது.
தற்போது, தொழில் முனைவோராக இருப்பதற்கு இப்பள்ளி எனது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உதவும் மனப்பான்மை
நீதிமணி கூறியதாவது:
இங்கு, படித்து கணினி பட்டதாரி ஆனேன். 2000ம் ஆண்டு சிதம்பரத்தில் கணினி பயிற்சி மையம் துவங்கி, அதன் மூலம் நிறைய பட்டதாரிகளுக்கு கல்வி கற்று கொடுத்தேன். நெய்தல் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறேன்.
கடந்தாண்டு சிதம்பரம் இந்திரா நகரில் மழையால் பாதித்த மக்களுக்கு உணவு வழங்கினேன். இத்தகைய உதவி செய்யும் மனப்பான்மையை பள்ளி கற்றுக் கொடுத்தது. வாழ்க்கை மகத்தானது. அது பிறர்க்கென வாழும்போது என்ற காரல் மார்க்சின் ஒப்பற்ற கொள்கையை எனக்கு எனது அடிப்படை கல்வியே வழங்கியது.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றனர். மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு ஆசிரியர்கள் கடினமாக உழைக்கின்றனர்.
ஆசிரியர்கள் கடின உழைப்பு
தலைமை ஆசிரியர் வேத ரத்தினம் கூறியதாவது:
கடந்த 13 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். எனது வளர்ச்சிக்கு வித்திட்டது இப்பள்ளிதான்.இங்கு படித்த மாணவர்கள் பல நிறுவனங்களில் பணிபுரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வில் இதுவரை ஏழு மாணவர்களை தேர்வு செய்ய உறுதுணையாக இருந்துள்ளோம். எதிர்காலத்தில் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் இப்பள்ளி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஆசிரியர்கள் அனைவரும் கடினமாக பணியாற்றி வருகின்றனர்.
அடிப்படை கல்வியே சிறந்தது
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் கூறியதாவது:
இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் போது நடந்த சுதந்திர தின விழாவில், 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்ற பாரதியாரின் பாட்டை பாடியதற்கு எனக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இப்பள்ளியின் அடிப்படை கல்வி தான், நான் ஆசிரியராக பணிபுரிய வழிவகை செய்தது. அதன் காரணமாக 1976ம் ஆண்டு இப்பள்ளியின் தற்காலிக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்கிறேன்.
பள்ளியில் படித்தது பெருமை
வழக்கறிஞர் அபிராமி கூறிய தாவது:
இப்பள்ளியில் தாய்மொழி வழிக்கல்வியில் தான் பயின்றேன். எனது சகோதர்களும், இங்குதான் பயின்றனர். எனது தாய் மிகவும் சிரமப்பட்டு இறால் வியாபாரம் செய்துதான் எங்களை படிக்க வைத்தார். சிறு வயதில் சிரமத்தோடு கற்ற கல்வியே வழக்கறிஞராக உயர காரணம். எளிய குடும்பத்தில் பிறந்து அரசுப்பள்ளியில் கல்வியை துவங்கிய நான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளேன். இங்கு படித்ததை பெருமையாக நினைக்கிறேன்.