ADDED : ஜன 25, 2025 05:04 AM

விருத்தாசலம் : கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய தேர்த் திருவிழாவில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர்த் திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 7:00 மணி, பகல் 12:00, மாலை 6:00 மணியளவில் சிறப்பு திருப்பலி நடந்தது.
நேற்று முன்தினம் தேர் திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு பங்குத்தந்தை ஆக்னல் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி, இரவு 8:00 மணிக்கு திருப்பலி நடந்தது. பின்னர், இரவு 9:00 மணியளவில் பாளையக்காரர் ரமேஷ் கச்சிராயர், புதுவை - கடலுார் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
விழாவில், மும்பை, பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

