கற்றல் கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு
கற்றல் கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு
UPDATED : மே 16, 2026 08:58 PM
ADDED : மே 16, 2026 08:41 PM
கடலுார்: கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் நலம் கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் கடலுார் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மாணவர்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.
இந்நிலையில், செல்லங்குப்பம் சி.கே சி.பி.எஸ்.சி., பள்ளி, புனித அன்னாள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, சி.கே மெட்ரிக் பள்ளி, முருங்கப்பாக்கம் புதுச்சேரி ஓட்டல் மற்றும் உணவு மேலாண்மை தொழில்நுட்ப கல்லுாரி, முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமம் ஆகிய இடங்களில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர் நிகழ்வாக பள்ளி மாணவ, மாணவிகள் இறுதி தேர்வு முடிவுற்று கோடை விடுமுறையில் உள்ளதால் தங்களது விடுமுறை நாட்களை பயனுள்ளதாகவும், தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு தற்போது நடந்து வருகிறது .
கடந்தாண்டு கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களின் தனி திறன்களை மேம்படுத்திட 10 வகையான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இத்திட்டம் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் பெறும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 18 வகையான பயிற்சி வகுப்புகள் கடந்த, 11ம் தேதி முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
கடலுார் செல்லங்குப்பம், சி.கே சி.பி.எஸ்.சி., பள்ளியில் சறுக்கு விளையாட்டு, புனித அன்னாள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் போட்டோகிராபி, பனைஓலை கைவினை பொருட்கள் மற்றும் சதுரங்க விளையாட்டு, சி.கே. மெட்ரிக் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 18 வகையான பயிற்சி வகுப்புகள் 800 அரசு மாணவ, மாணவிகளுக்கு தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், உதவி திட்ட அலுவலர் சிங்காவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
