எல்நினோ' காரணமாக தென்மேற்கு பருவமழை குறைவு:மானாவாரி, விவசாய பயிர்கள் பாதிக்கும் அவலம்
எல்நினோ' காரணமாக தென்மேற்கு பருவமழை குறைவு:மானாவாரி, விவசாய பயிர்கள் பாதிக்கும் அவலம்
UPDATED : ஆக 17, 2026 03:35 AM
ADDED : ஆக 16, 2026 05:41 PM

கடலுார்:எல்நினோ காரணமாக கடலுார் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையில் கிடைக்கும் மழையளவு குறைந்துள்ளது. இதனால் குறுவை நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
உலக காலநிலை அமைப்புகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்று எல்நினோ. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் தற்காலிக கால நிலை மாற்றம், உலகின் பல பகுதிகளில் மழை, வெப்ப நிலை மற்றும் பருவநிலை முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கக்கூடியது. பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் வெப்பமான நீரும், கிழக்குப்பகுதியில் குளிர்ந்தநீரும் காணப்படும்.
ஆனால் எல்நினோ காலத்தில் இந்த இயல்பான நிலை மாறி, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகம் வெப்பமடைகிறது. பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்ப நிலை சராசரியை விட .5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே அது எல்நினோவாக கருதப்படுகிறது. தற்போது கடல் மேற்பரப்பு வெப்ப நிலை வழக்கத்தை விட .7 டிகிரி செல்சியதாக அதிகரித்ததால், எல்நினோ காலம் தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தற்போது எல்நினோ தாக்கத்தால் பருவ மழை குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களாகும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் மழையை பயன்படுத்திதான் மானாவாரி தானியங்கள் விதைப்பு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆண்டிற்கு 383.1 மி.மீ., மழை கிடைக்க வேண்டும். அதில் அதில் ஜூன் மாதத்தில் 47.30 மி.மீட்டருக்கு 62.80 மி.மீட்டரும், ஜூலை மாதம் 75.10 மி.மீட்டருக்கு 17.12 மி.மீட்டரும், ஆகஸ்ட் இதுவரை 129.2 மி.மீ., 50.57 மி.மீட்டரும் ஆக மொத்தம் 130.49 மி.மீ., வரை தான் இதுவுரை பெய்துள்ளது. அதாவது 3ல் ஒரு பங்கு மழைதான் பெய்துள்ளது. செப்டம்பர் மாதம் வரை எவ்வளவு மழை பெய்யும் என தெரியவில்லை.
இருப்பினும் காலம் கடந்து பெய்வதால் விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்காது. தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி நடவு செய்துவிட்டு மேட்டூர் தண்ணீரை எதிர்நோக்கியுள்ளனர். பெண்ணையாறு, கெடிலம் ஆற்றுப்படுகையில் உள்ள மேல் ஊற்று போர்வெல்களின் பம்புசெட்டுகள் வேலை செய்யவில்லை. தண்ணீர் இல்லாமல் போர்வெல்கள் வற்றி விட்டன.
நடவு செய்யப்பட்ட நெற்பயிரும் சரியான பச்சை பிடிக்காமல் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதனால்தான் காவிரி தண்ணீரை எதிர்பார்த்து பல போராட்டங்களை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் காவிரி நீர் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சராசரி 96 சதவீதம் மழைபெய்த நிலையில் இந்த ஆண்டு எல்நினோ காரணமாக மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. எல்நினோவால் வரலாறு காணாத வெப்பம் மாற்றம் ஏற்படலாம்.
