/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடன் உதவி
/
சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடன் உதவி
ADDED : டிச 08, 2025 05:53 AM
கடலுார்: சிறுபான்மையின கைவினை க் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தையல் தொழில், பாய் முடைதல், கூடை பின்னுதல், தறி நெய்தல், ஆரிஒர்க், எம்பிராய்டரி, கைவினைப் பொருட்கள் செய்தல், மரச்சாமான்கள் செய்தல் மற்றும் இதர கைவினை தொழில்கள் மேற்கொள்ளும் சிறுபான்மையின கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இரண்டு திட்டங்களின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப் படுகிறது.
முதல் திட்டப்படி, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் மிகாமல் உள்ளவர்களுக்கு, அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம், ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
இரண்டாம் திட்டப்படி, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும், சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு, அதிக பட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் போன்ற சிறுபான்மையினத்தை சார்ந்த கைவினை கலைஞர்கள், விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பங்களை https://tamco.tn.gov.in/ என்ற இணையதள முகவரி அல்லது கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்று கொண்டு அதிக அளவில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

