/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உள்ளூர் காய்கறிகள் விலை வரலாறு காணாத... வீழ்ச்சி; கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு
/
உள்ளூர் காய்கறிகள் விலை வரலாறு காணாத... வீழ்ச்சி; கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு
உள்ளூர் காய்கறிகள் விலை வரலாறு காணாத... வீழ்ச்சி; கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு
உள்ளூர் காய்கறிகள் விலை வரலாறு காணாத... வீழ்ச்சி; கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு
ADDED : மார் 25, 2025 06:59 AM

கடலுார்: கடலுார் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் கத்தரி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில், கரிசல் மண் காய்கறி பயிருக்கு ஏற்றவையாக இருப்பதாலும், நிலத்தடி நீர் தடையின்றி கிடைப்பதாலும் மாவட்டம் முழுவதும் பரவலாக காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே வெங்காயம், கேழ்வரகு, கம்பு போன்றவை நடவு செய்வது முற்றிலும் விவசாயிகள் தவிர்த்துவிட்டனர். இப்பயிர்களுக்கு விவசாய கூலிகள் அதிகளவு தேவைப்படுவதாலும், விலை குறைவாலும் மாற்றுப்பயிருக்கு மாறினர். குறிப்பாக, எளிய முறையில் பயிர் செய்யும் காய்கறி பயிர்களுக்கு விவசாயிகள் மாறிவிட்டனர்.
கடலுார் மற்றும் பண்ருட்டி, மலைக் கிராமங்கள், குறிஞ்சிப்பாடி, வடலுார், விருத்தாசலம் பகுதிகளில் அதிகளவில் தோட்டக்கலை பயிர்களான கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை பயிர் செய்து வருகின்றனர். தமிழர்களின் சமையலில் அதிகளவு இதுபோன்ற நாட்டு காய்களிகள் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் விற்பனையும் அதிகம் நடக்கிறது.
தற்போது, பருவ மழை முடிந்து விவசாயிகள் ஒரே நேரத்தில் அனைத்து காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் மாவட்டம் முழுவதும் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக காய்கறிகள் மார்க்கெட்டில் குவிந்து வருவதால் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.
கடலுார் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களான நாணமேடு, கண்டக்காடு, தாழங்குடா, பாலுார், பண்ருட்டி, ரெட்டிச்சாவடி, கேப்பர் மலை கிராமங்களில் அதிகளவில் கத்தரி பயிர் செய்யப்பட்டுள்ளன. தற்போது அறுவடை செய்யப்பட்ட கத்தரிக்காய் மார்க்கெட்டில் குவிந்து வருவதால் கிலோ 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பச்சை மிளகாய் கிலோ 12, வெண்டை 10, தக்காளி 12 ரூபாய்க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலை எப்போதும் இல்லாத அளவில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்களுக்கு உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், அறுவடை கூலி, மருந்து தெளித்தல் போன்றவையை கணக்கு பார்த்தால், பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க, ஈரோடு மாவட்டத்தில் இருந்து கத்தரிக்காய் கடலுாருக்கு அனுப்பப்படுகிறது. ஈரோடு பகுதிகளிலும் அதிகளவில் உற்பத்தியாகும் கத்தரிக்காய் விற்பனை செய்ய முடியாமல் கடலுார், பண்ருட்டிக்கு அனுப்பப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியில் இருந்து உற்பத்தி செலவு அளவில் விற்பனை செய்தால் தான் விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும்.