/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடம், வெள்ளாற்றில் கதவணை அமைக்க கோரி கடையடைப்பு! எதிர்ப்பை வெளிப்படுத்திய சிதம்பரம், புவனகிரி வியாபாரிகள்
/
கொள்ளிடம், வெள்ளாற்றில் கதவணை அமைக்க கோரி கடையடைப்பு! எதிர்ப்பை வெளிப்படுத்திய சிதம்பரம், புவனகிரி வியாபாரிகள்
கொள்ளிடம், வெள்ளாற்றில் கதவணை அமைக்க கோரி கடையடைப்பு! எதிர்ப்பை வெளிப்படுத்திய சிதம்பரம், புவனகிரி வியாபாரிகள்
கொள்ளிடம், வெள்ளாற்றில் கதவணை அமைக்க கோரி கடையடைப்பு! எதிர்ப்பை வெளிப்படுத்திய சிதம்பரம், புவனகிரி வியாபாரிகள்
ADDED : ஆக 13, 2024 09:44 PM

கடலுார் மாவட்டத்தில், சிதம்பரம் நகரின் வடக்கு பகுதியில் கொள்ளிடம், தெற்கே புவனகிரியொட்டி வெள்ளாறும் ஓடுகிறது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீர், இந்த இரு ஆறுகள் வழியாக சிதம்பரம் அருகே கடலில் கலக்கிறது.
முக்கிய வடிகாலாக உள்ள இரு ஆறுகளும் கோடை காலங்களில் வறண்டு விடுவதால், கடல் நீர் இதன் வழியாக உட்புகுந்து இப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறி வருகிறது. இதனால், குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.எனவே, ஆற்றங்கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் இரு ஆறுகளிலும் கதவணை கட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2017- 2018 ம் ஆண்டில், கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் கதவணை அமைக்க சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் சட்டசபையில் கோரிக்கை வைத்தார். அதையடுத்து, இரு ஆறுகளிலும் ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்ய, அப்போதைய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
அதையடுத்து, பொதுப்பணி துறையினர் ஆய்வு மேற்கொண்டு, கொள்ளிடத்தில் கருப்பூர் - மாதிரிவேலுார் இடையே கதவணை கட்ட, ரூ. 399 கோடியிலும், புவனகிரி வெள்ளாற்றில் ஆதிவராகநல்லுாரில் ரூ. 112.85 கோடியிலும் திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., பொறுப்பேற்ற பின்பு, நிதி நெருக்கடி காரணமாக, கதவணை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் விரக்தியடைந்திருந்த நிலையில், சிதம்பரம் மற்றும் புவனகிரி வர்த்தக சங்கத்தினர், இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். கதவணை திட்டம் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்தும், விரைந்து கதவணை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று கடையடைப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று சிதம்பரம், புவனகிரியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காலை 6:00 மணிக்கு துவங்கி, 11:00 வரையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், சிதம்பரம் மற்றும் புவனகிரியின் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.