/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களநாயகி அம்மன் தேரில் வீதியுலா மங்கலம்பேட்டையில் கோலாகலம்
/
மங்களநாயகி அம்மன் தேரில் வீதியுலா மங்கலம்பேட்டையில் கோலாகலம்
மங்களநாயகி அம்மன் தேரில் வீதியுலா மங்கலம்பேட்டையில் கோலாகலம்
மங்களநாயகி அம்மன் தேரில் வீதியுலா மங்கலம்பேட்டையில் கோலாகலம்
ADDED : மே 29, 2025 03:29 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் வைகாசிப் பெருவிழா தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்து தேரை இழுத்து வந்தனர்.
மங்கலம்பேட்டையில் பழமைவாய்ந்த மங்களநாயகி அம்மன் கோவிலில், வைகாசிப் பெருவிழா, கடந்த 13ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்வுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு ரிஷபம், பூதம், குதிரை, காமதேனு, யானை, முத்துப்பல்லக்கு, வெட்டுக்குதிரை வாகனங்களில் வீதியுலா நடந்தது.
முக்கிய நிகழ்வாக, கடந்த 24ம் தேதி காலை, பள்ளிப்பட்டு, ரூபநாராயணநல்லுார் கிராமங்கள் வழியாக, கோ.பூவனுாரில் உள்ள தாய் வீட்டிற்கும், 25ம் தேதி அண்ணன் வீடான கர்நத்தம் கிராமத்திற்கும் மங்களநாயகி சென்று வரும் ஐதீக நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை 10:00 மணிக்கு, தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தி எழுந்தருளியதும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் துவங்கியது.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், செயல் அலுவலர் மயில்வாகனன் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். மேலும், தேரோட்டத்திற்கு பங்கேற்ற முஸ்லிம் சமூக நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை, முகாசபரூர் ஆதீன பரம்பரை அறங்காவலர் ஜமீன் வீரசேகர பொன்னம்பல வேலுச்சாமி கச்சிராயர், ரமேஷ் கச்சிராயர் மற்றும் அரண்மனை குடும்பத்தனர், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு, நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.