/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உருகுலைந்த ஏசி நிழற்குடை ரூ.15 லட்சம் நிதி வீண்
/
உருகுலைந்த ஏசி நிழற்குடை ரூ.15 லட்சம் நிதி வீண்
ADDED : ஜன 29, 2025 07:11 AM

விருத்தாசலம் பெரியார் நகர் வடக்கு, தெற்கு பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு எம்.எல்.ஏ., அலுவலகம், தனியார் பள்ளிகள், தீயணைப்பு நிலையம், இந்தியன் வங்கி, நிலவள வங்கி, மைக்ரோ நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன.
கடலுார் பிரதான சாலையில் பஸ் நிறுத்தம் இருப்பதால், ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, அருண்மொழிதேவன் எம்.பி.,யாக இருந்தபோது, அவரது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாயில் குளிர்சாதன நிழற்குடை கட்டி திறக்கப்பட்டது.
ஒரு சில மாதங்களே பயன்பாட்டில் இருந்த நிழற்குடையில் ஏசி, மின் விசிறிகள், இருக்கைகளை சமூக விரோதிகள் சேதப்படுத்தினர்.
இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. தொடர்ந்து, நிழற்குடையை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து, அதனருகே ஏ.டி.எம்., மையம் அமைத்து, செக்யூரிட்டியுடன் பராமரிக்கப்பட்டது.
நாளடைவில் செக்யூரிட்டி பணியில் இல்லாததால், நிழற்குடை உருக்குலைந்து போஸ்டர் ஒட்டும் சுவராக மாறி, காட்சிப்பொருளானது.
எனவே, குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

