/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு
/
புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு
புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு
புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு
ADDED : டிச 31, 2024 06:52 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை நேற்று கடலுாரில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் துவக்கி வைத்தனர்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படித்து தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 8 , 9 ,10 ம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவிகள் பயனடையும் வகையில், புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல்வர் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கடலுார் புனித அன்னாள் பள்ளியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 2,488 மாணவிகளுக்கு வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், பெண்களின பொருளாதார தேவையை நிறைவேற்றும் திட்டமாக மகளிர் விடியல் பஸ் பயணத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. துவக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது என்றார்.
அமைச்சர் கணேசன் பேசுகையில், மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி முதல்வர் செயல்படுத்தி வருகிறார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என, பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், எஸ்.பி., ராஜாராம், மாநகராட்சி கமிஷனர் அனு, மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.