விருத்தாசலத்தை தி.மு.க., கைப்பற்றியிருக்க வேண்டும் :அமைச்சர் பேச்சு
விருத்தாசலத்தை தி.மு.க., கைப்பற்றியிருக்க வேண்டும் :அமைச்சர் பேச்சு
ADDED : ஏப் 03, 2026 10:48 PM

விருத்தாசலம்: 'விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டியிடுவதால், இந்த தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது' என அமைச்சர் கணேசன் பேசினார்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதாவுக்கு ஆதரவாக, ஜங்ஷன் சாலையில் உள்ள காங்., மாளிகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் முன்னிலை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து நன்றி கூறினார்.
நகராட்சித் தலைவர் சங்கவி முருகதாஸ், நகர துணை செயலாளர் ராமு, வி.சி., மாவட்ட செயலாளர் திராவிடமணி, காங்., மாவட்ட தலைவர் லாவண்யா, மக்கள் நீதி மய்யம் வெங்கடகிருஷ்ணன் உட்பட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் கணேசன் பேசுகையில், 'விருத்தாசலம் தி.மு.க., கோட்டை. இந்த தொகுதியை தி.மு.க., கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா போட்டியிடுவதால், ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது.
அவர், நம்மை நம்பி இந்த தொகுதிக்கு வந்துள்ளார். இந்த தேர்தல் கவுரவ பிரச்னை. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பிரேமலதாவை வெற்றி பெற வைக்க வேண்டும். தொகுதி பொறுப்பாளராக தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து பணிபுரிவார்.
பிரேமலதா எம்.எல்.ஏ., ஆனதும் விருத்தாசலம் மாவட்டமாகும். 75 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
திட்டக்குடியில் நான், விருத்தாசலத்தில் பிரேமலதா, குறிஞ்சிப்பாடியில் பன்னீர்செல்வம் என ஒன்பது தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று, கோட்டையில் முதல்வாக ஸ்டாலினை அமரச்செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
சுதீசுக்கு ஹீரோயின் மேலும், அவர் பேசுகையில், 'தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் அழகாக இருக்கிறார். அவரை வைத்து படம் எடுக்கலாம். ஹீரோயினை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ராஜ்யசபா நிதியில் 10 சதவீதம் தருவதாக கூறுகிறார். 25 சதவீதமாக வாரி வழங்குங்கள்.
ஆம்பூரில் வாய்ப்பு சுதீஷ் பேசுகையில், 'ஆம்பூரில் வாய்ப்பு கிடைத்தும், விருத்தாசலத்தை தேர்வு செய்தார் பிரேமலதா. கூட்டணி அமைந்த பிறகே கணேசனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 40 ஆண்டுகால நட்பு போல பழகுகிறார். மந்திரி போல இல்லாமல், எளிமையாக இருக்கிறார்' என்றார்.
