ADDED : அக் 13, 2024 07:39 AM

கடலுார்: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியான கடலுார் மாநகராட்சி பகுதில் இம்பீரியல் சாலையை கடந்து கெடிலம் ஆற்றில் கலக்கும் சின்ன வடிகால் வாய்க்கால், பஸ் நிலையம் பின்புறம் மற்றும் கடலுார் முதுநகரில் பெரிய வாய்க்கால் துார் வாரும் பணியை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கடலுார் ஊராட்சி ஒன்றியம், குண்டுஉப்பலவாடி மற்றும் தாழங்குடா பகுதிகளில் உள்ள தற்காலிக தங்குமிடமான சமுதாய கூடம், குடிகாடுபல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம், பச்சையாங்குப்பம் புயல் பாதுகாப்பு மையம், ராசாப்பேட்டை புயல் பாதுகாப்பு மையம்ஆகியவற்றில் குடிநீர், மின்சாரம், ஜெனரேட்டர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதா என ஆய்வுசெய்தார்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாணவர் தங்கும் அறைகள், சமையலறை, கழிவறைகளை ஆய்வு செய்து, விடுதியை துாய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையர் அனு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.