/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் நிலுவை தொகை... ரூ.12 கோடி; விரைவாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் நிலுவை தொகை... ரூ.12 கோடி; விரைவாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் நிலுவை தொகை... ரூ.12 கோடி; விரைவாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் நிலுவை தொகை... ரூ.12 கோடி; விரைவாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 26, 2025 06:38 AM

கடலுார்: எம்.ஆர்.கே.,கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ரூ.12 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டுமென, விவசாயிகள் பேசினர்.
கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ.,க்கள் ராஜசேகரன், ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
மாதவன்: அம்பிகா ஆரூரான் நிர்வாகம் ஆலை விவசாயிகளுக்கு வங்கி கடன்களை அடைத்து என்.ஓ.சி., வழங்கும் பணி துவங்கி உள்ளதை வரவேற்கிறோம். அனைத்து விவசாயிகளுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.
காந்தி: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு நிலவைத் தொகை 12 கோடி ரூபாய் உள்ளது. இதனை தமிழக அரசிடம் கடன் பெற்று தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு உற்பத்தியை பெருக்க ஆலை நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன்: கடலுார் மாவட்டத்தில் சுரங்கம் மற்றும் கனிம துறை சார்ந்த சமூக பொறுப்புணர்வு நிதி செலவினத்தில் நீர் சேமிப்பு, நீர் ஆதார கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிலம், வீடு, மனை கொடுத்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள நிதி ஒதுக்கீடு, ஆட்சேபனை இல்லா கடிதம் வழங்குவது போன்ற பணிகள் காலதாமதம் ஏற்படுவதை துரிதப்படுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரி வழங்க வேண்டும். குறிப்பாக, ஒரு விவசாயிக்கு 2,000 ரூபாய், ஒருவருக்கு 4,000, மற்றொருவருக்கு 6,000 ரூபாய் கிடைத்துள்ளது. இதில், முரண்பாடுகளை களைய வேண்டும்.
முருகானந்தம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் உள்ளதால் நடவு பணிகள் பாதிக்கின்றன. மும்முனை மின்சாரம் எத்தனை மணி நேரம் வழங்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மதுராந்தக நல்லுார் கிராமத்தில் செயல்படும் இ சேவை மையம் விவசாயிகளிடம் பயிர் காப்பீட்டுத் தொகையைப் பெற்று பயிர் காப்பீடு நிறுவனத்திற்கு செலுத்தாமல் கையாடல் செய்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டியை ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவதோடு இடைத்தரகர்களை கட்டுப்படுத்த வேண்டும்.
கலெக்டர் பேசுகையில், 'வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் பட்டா, சிட்டா, அடங்கல், விவசாயிகள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

