பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறந்த கையோடு பாழான அவலம்
பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறந்த கையோடு பாழான அவலம்
UPDATED : செப் 02, 2026 04:00 PM
ADDED : செப் 02, 2026 03:53 PM
வேப்பூர்:வேப்பூர் அரசு பள்ளியில் ரூ.35.65 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறந்த ஓரிரு வாரங்களில் சேதமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, கடந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ. 35.65 லட்சம் மதிப்பில், வாலிபால், கூடைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை கொண்ட பல்நோக்கு விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் விஜய் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே விளையாட்டு மைதானத்தின் சுற்றுப்புற இரும்பு கம்பி வேலிகள் மற்றும் கதவுகள் உடைந்துள்ளது. மைதான கான்கிரீட் தளங்கள் விரிசல் அடைந்து மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும், பல்நோக்கு விளையாட்டு மைதானத்தின் கல்வெட்டு கூட காணவில்லை. இதனால், ரூ.35.65 லட்சம் மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது.
இது குறித்து விசாரித்ததில், பல்நோக்கு விளையாட்டு மைதானம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் மாணவர்கள் பயன்படுத்த முடியவில்லை என ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் தான் தொடர்ந்து சேதப்படுத்துவதாகவும், அதனை அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக பராமரிக்கவில்லை என ஒன்றிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, சேதமடைந்த பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
