/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதால் விபத்து... அபாயம்! பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை
/
தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதால் விபத்து... அபாயம்! பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதால் விபத்து... அபாயம்! பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதால் விபத்து... அபாயம்! பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை
ADDED : டிச 23, 2025 04:08 AM

விருத்தாசலம்: கடலுார் - விருத்தாசலம் - சேலம் (சி.வி.எஸ்.,) தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் வரை 111 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை, கடந்த 2012 ஏப்ரலில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து, கடலுார் பச்சையா ங்குப்பம் முதல் விருத்தாசலம் வரை; விருத்தாசலம் முதல் வேப்பூர் வழியாக சின்னசேலம் கூட்ரோடு வரை; என இரு கட்டங்களாக பணிகள் நடந்து முடிந்தன.
இதற்காக, சாலையோர மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டன.
மேலும் சிறுபாலங்கள், மேம்பாலங்கள் அகலப்படுத்தப்பட்டன. சாலை விரிவாக்க பணிகள் முடிந்து, வாகனங்கள் எதிரெதிர் திசையில் சிரமமின்றி செல்கின்றன. இதனால் வழக்கத்திற்கு மாறாக வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. மேலும், விரிவாக்கப் பணிகள் நடந்தபோதே, மந்தாரக்குப்பம் - விருத்தாசலம் இடையே பொன்னாலகரம் கிராமத்திலும், வேப்பூர் - சின்னசேலம் இடையே கீழ்குப்பம் கிராமத்திலும் டோ ல்பிளாசாக்கள் அமைக்கப்பட்டன. இருபுறமும் தலா மூன்று வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யாமல், டோல்பிளாசாவில் கட்டணம் வசூலிக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுநல அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் டோல்பிளாசா பயன்பட்டிற்கு கொண்டு வரப்பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. குறிப்பாக, விருத்தாசலம் - வேப்பூர் இடையே பரவளூர், தொரவளூர், விளாங்காட்டூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆங்காங்கே பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது.
இதனால் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதியில் சாலை உள்வாங்கிய நிலைக்கு மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் அதிருப்தியடைந்தனர். தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்று, பழுதான பகுதியை முழுமையாக வெட்டி அகற்றி, பேட்ஜ் ஒர்க் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேப்பூர் - சின்னசேலம் மார்க்கத்தில், பெரியநெசலுார், அடரி பஸ் நிறுத்தம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் விரிவாக்கம் செய்த சாலைகள் பெயர்ந்தும், உள்வாங்கியும் உள்ளது. இதனால் நெடுந்துார வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கடலுார் - விருத்தாசலம் - சேலம் (சி.வி.எஸ்.,) தேசிய நெடுஞ்சாலையில், டோல்பிளாசாக்கள் மூலம் கட்டணம் வசூலிப்பதால், சாலையை தரமாக அமைத்திட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

