/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீர்மானம் நிறைவேறாமல் நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
/
தீர்மானம் நிறைவேறாமல் நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
தீர்மானம் நிறைவேறாமல் நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
தீர்மானம் நிறைவேறாமல் நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : மே 06, 2025 12:39 AM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் பெரும்பாலான கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்றி ஒத்தி வைக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க.,கவுன்சிலர்கள் ஜெயபிரபா, சத்தியா மற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தனர். ஆனால், மற்ற தி.மு.க.,-அ.தி.மு.க.,-பா.ம.க.,-காங்.,-வி.சி.,-சுயேச்சை கவுன்சிலர்கள் 23 பேர், சேர்மன் ஜெயந்தியிடம் ஆலோசனை நடத்தி விட்டு 11:00 மணிக்கே கூட்ட அரங்கிற்கு வந்த பிறகு கூட்டம் துவங்கியது.
சுயேச்சை கவுன்சிலர் பாரூக் உசேன் பேசுகையில், 'நடப்பு மாதத்தில் விடப்பட்ட டெண்டர் விவரங்கள் தீர்மானத்தில் வரவில்லை. எந்த பணியாக இருந்தாலும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. எனவே, இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதால் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்' என்றார்.
இதே கருத்தை மற்ற கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கேட்டு கொண்டதால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது எனவும், இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய 24 தீர்மானங்கள் அடுத்த கூட்டத்தில் எடுத்து கொள்ளப்படும் எனக் கூறி சேர்மன் ஜெயந்தி கூட்டத்தை முடித்தார்.
இதையடுத்து தி.மு.க.,கவுன்சிலர்கள் ஜெயபிரபா, சத்தியா, மஞ்சுளாவை தவிர கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கவுன்சிலர்கள் ஜெயந்தியிடம் அளித்த மனுவில், 'கடந்த மாதம் 28ம் தேதி 5 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை, சிமெண்ட் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது பற்றி கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
எனவே, அந்த டெண்டர்களை நகரமன்ற ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்கக் கூடாது' என கூறி வெளியேறினர். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகளும் புறப்பட்டனர். கூட்டரங்கில் அமர்ந்திருந்த கவுன்சிலர் ஜெயபிரபா ' என்ன மனு அளித்தார்கள். எதற்காக கூட்டத்தை ஒத்தி வைத்தார்கள்.
என்ன நடக்கிறது என தெரியவில்லையே என, கூச்சலிட்டார். அனைவரும் வெளியேறியதால் அவரும் வேறு வழியின்றி வெளியேறினார். இதனால் நகரமன்ற கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.