/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணல்மேடு - சேத்தியாத்தோப்பு இடையே... புதிய சாலை
/
மணல்மேடு - சேத்தியாத்தோப்பு இடையே... புதிய சாலை
ADDED : செப் 25, 2024 05:55 AM

மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கொள்ளிடக்கரை கிராம மக்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமெனில், மணல்மேடு என்ற கிராமத்தில் இருந்து கொள்ளிடம் பாலம் வழியாக காட்டுமன்னார்கோவில் வந்து, அங்கிருந்து வீராணம் ஏரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இதனால் காட்டுமன்னார்கோவில் நகரப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், 14 கிலோ மீட்டர் துாரம் வீராணம் ஏரிக்கரை சாலையில் பாதுகாப்பற்ற பயணம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏரிக்கரை சாலையில் ஒரு புறம் ஏரி, மறு புறம் கிடு கிடு பள்ளம் இருப்பதால், அச்சாலையை அகலப்படுத்துவோ, மேம்பாடு செய்யவோ முடியாத நிலை உள்ளது. இதனால் ஏரிக்கரை சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருவதால், பாதுகாப்பாற்ற நிலையில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, வீராணம் ஏரிக்கரை சாலைக்கு இணையாக புதிய மாற்றுச்சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கொள்ளிடக்கரை கிராம மக்கள் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து, அமைச்சர் முயற்சியால், கொள்ளிடக்கரையொட்டி, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் இருந்து கொள்ளிடம் பாலம் வழியாக, முட்டம், சர்வராஜன்பேட்டை, டி.நெடுஞ்சேரி. ஓடாக்கநல்லுார், சாத்தமங்கலம், மீராளூர் வழியாக சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரையில் புதிய சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னலுாரில் இச்சாலை, சென்னை- கும்பகோணம் சாலையில் இணையும் வரையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின் போது பொதுப்பணிகள் அமைச்சர் வேலு இச்சாலைக்கான அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து, வீராணம் ஏரிக்கரை சாலையொட்டி, புதிய வழித்தடத்தில் சாலை அமைப்பது குறித்து, ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, பணிகளை மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை விழுப்புரம் கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் நேற்று, மணல் மேட்டில் துவங்கி, முட்டம் வழியாக, நெடுஞ்சேரி பகுதி சாலை வழித்தடம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை கடலுார் கோட்டப்பொறியாளர் சிவக்குமார். காட்டுமன்னார்கோவில் கோட்டப் பொறியாளர் சந்தோஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கான முதற்கட்ட ஆய்வு என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சாலை அமையும் பட்சத்தில், இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன, சென்னையிலிருந்து தெற்கு பகுதி டெல்டா மாவட்டங்களுக்கு செல்வதற்கு காலவிரையம் இல்லாமல் குறைந்த தூரத்தில் மக்கள் சிரமமில்லாமல் சென்றடைய முடியும்.