/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை
/
கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை
ADDED : ஜன 02, 2024 06:52 AM

கடலுார், : ஆங்கில புத்தாண்டையொட்டி, கடலுார் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது, திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்..
ஆங்கில புத்தாண்டு, கடலுார் மாவட்டம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில்களில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது.
தொடர்ந்து, ஹேமாபுஜவல்லி தாயார் சமேத தேவநாத சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாரதனைகள் நடந்தன.
அதேபோன்று கடலுார் புதுப்பளையம் ராஜகோபாலசாமி கோவில், திருப்பாதிரிபுலியூர் வீர ஆஞ்சநேயர், வரதராஜபெருமாள் கோவில், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை முதல் பொதுமக்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்
பூவராகசாமி கோவிலில் அதிகாலையில் மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அம்புஜவல்லிதாயார் உற்சவமூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நண்பர்கள் குழு சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெண்ணாடம்
புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 5:30 மணியளவில் மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தொடர்ந்து, லட்சுமி குபேர பூஜை, நாணயத்தாள் அம்மனுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
பிரகாரத்தில் உள்ள வெற்றி விநாயகர், மாரியம்மன், ஆண்டாள் நாச்சியார், சந்திர மவுலீஸ்வரர் சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோன்று, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நடுவீரப்பட்டு
பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவில், சோமநாதர் கோவில், திருவதிகை ரங்கநாத பெருமாள், நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் ரேணுகாபரமேஸ்வரி அம்மன், மலையாண்டவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் விநாயகரும், ஊஞ்சல் உற்சவத்தில் உற்சவர் விநாயகரும் அருள்பாலித்தனர். வேணுகோபாலசாமி கோவிலில் பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விருத்தாசலம்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், சந்தனகாப்பு அங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

