ADDED : அக் 08, 2024 02:45 AM

கண் சிகிச்சை முகாம்
மருதுாரில் வள்ளலார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு எடப்பாடியார் மக்கள் நலப் பேரவை, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த கண் சிகிச்சை முகாமிற்கு பேரவை மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். இணைச் செயலாளர் சின்ராசு, துணைச் செயலாளர் ரகோத்தமன் முகாமை துவக்கி வைத்தனர். மகாத்மா காந்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
கருத்தரங்கு
ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த தொழில் முனைவோர் கருத்தரங்கம் மற்றும் பயற்சி பட்டறைக்கு, கல்லுாரி முதல்வர் மாலதி தலைமை தாங்கினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். அண்ணாமலை பல்கலை பேராசிரியர் கணேசமூர்த்தி, மயிலாடுதுறை தமிழ் நாடு மேம்பட்ட தொழில் நுட்ப பயிற்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் நெடுஞ்செழியன் பேசினர். கருத்தரங்கில், மாணவிகளுக்கான சுய வேலைவாய்ப்பாக துணியில் தஞ்சாவூர் ஓவியம் வரைதல், அதனை சந்தை படுத்தும் முறைகள் குறித்து சங்கீதா பயிற்சி அளித்தார். 150 மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
வேகக்கொல்லை ஊராட்சியில் நடந்த நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாமிற்கு, ஊராட்சி தலைவர் சங்கரி தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் தனம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பொது மேலாளர் அறிவுமணி முகாமை துவக்கி வைத்து பேசினார். துணை பொது மேலாளர் அருளழகன், வட்டார கல்வி அலுவலர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விப்புணர்வு, மரக்கன்று நடுதல், மருத்துவ முகாம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
காட்டுமன்னார்கோவிலில் சுவாமி சகஜந்த மக்கள் நல பேரவை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பேரவை நிறுவனத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சம்பந்தம், பொதுச் செயலாளர் தர்மராஜன் முன்னிலை வகித்தனர். ராஜூலு வரவேற்றார். முன்னாள் ஊராட்சி தலைவர் மகாலிங்கம், பூராசாமி, ராமானுஜம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு குழு கமிட்டி தலைவர் இளையபெருமாள் கமிட்டி அறிக்கையை அமுல்படுத்தக்கோரி பேசினர்.
என்.எஸ்.எஸ்., மாவட்ட அலுவலர் ஆய்வு
சிதம்பரம் நகரில் அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காமராஜ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, ராமசாமி செட்டியார் பள்ளி ஆகிய பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. முகாம்களை மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுருகம் ஆய்வு செய்தார். மாணவர்களின் வருகைப் பதிவேடு, அன்றாட செயல்பாடுகள் பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யப்பட்டது.
செயற்குழு கூட்டம்
விருத்தாசலத்தில் நடந்த இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜிவ்காந்தி, ஒன்றிய தலைவர் ஜெயசீலன், மாவட்ட பொருளாளர் கணேசன், முன்னிலை வகித்தார். நகர தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை பேசினார். கூட்டத்தில், ரூபநாராயண நல்லுாரில் முறைகேடாக வழங்கப்பட்ட மனைப் பட்டாவை ரத்து செய்ய மறுக்கும் வருவாய்த் துறையினரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.