/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சுரங்கத்தில் தொழிலாளி உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
/
என்.எல்.சி., சுரங்கத்தில் தொழிலாளி உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
என்.எல்.சி., சுரங்கத்தில் தொழிலாளி உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
என்.எல்.சி., சுரங்கத்தில் தொழிலாளி உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
ADDED : ஜன 27, 2025 04:29 AM

மந்தாரக்குப்பம்,: என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் உரிய இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், வடக்குவெள்ளுர் ஊராட்சி வேப்பங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி, 59. இவர் நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு 9:30 மணியளவில் இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் அருகே வந்த போது கருணாநிதி திடீரென மயங்கி விழுந்தார்.
உடன் அவரை சக தொழிலாளிகள் மீட்டு என்.எல்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கருணாநிதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உறவினர்கள் நேற்று காலை 9:30 மணியளவில் இரண்டாம் சுரங்கம் நுழைவு வாயில் முன் திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்க கோரினர்.
முதன்மை பொது மேலாளர் சஞ்சீவி தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. டி.எஸ்.பி., சபியுல்லா, தாசில்தார் உதயகுமார் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால், மதியம் 2:00 மணியளவில் இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால், சுரங்கத்தில் பணி முடிந்த தொழிலாளர்கள் மட்டுமே வெளியே செல்ல முடிந்தது. 2ம் ஷிப்ட் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் பணிக்கு உள்ளே செல்ல முடியாமல், ஒரு மணி நேரம் காத்து இருந்து, வீட்டிற்கு திரும்பினர். புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் என்.எல்.சி., நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டம் இரவு வரை நீடித்த நிலையில், உயிரிழந்த கருணாநிதி மகள்கள் இருவருக்கு என்.எல்.சி., நிர்வாகம் வேலை வழங்குவதாக பேச்சுவார்த்தையில் கூறியதை தொடர்ந்து, இரவு 10:30 மணிக்கு, 13 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

