மாவட்ட நிர்வாகத்துடன் என்.எல்.சி., புதிய ஒப்பந்தம்
மாவட்ட நிர்வாகத்துடன் என்.எல்.சி., புதிய ஒப்பந்தம்
ADDED : பிப் 08, 2026 04:01 AM

நெய்வேலி : கடலுார் மாவட்ட நிர்வாகத்துடன் என்.எல்.சி., நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
என்.எல்.சி., இந்தியா நிறுவனம், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடலுார் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, என்.எல்.சி. சட்டம் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டத்துறை செயல் இயக்குனர் நாராயணமூர்த்தி முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ், என்.எல்.சி. நிறுவனம் அதன் முக்கிய நோக்கங்கள் மற்றும் தேசிய நிலையான வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மருத்துவம், கல்வி, குடிநீர், துப்புரவு மற்றும் பிற சமூக நலத் திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கோடியை வழங்கும்.
இந்த உத்தேசத் திட்டங்கள் உள்ளூர் மக்களின் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்வதுடன், கடலுார் மாவட்டத்தின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
