/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் குழாய் தாங்கி பாலம் உறுதித்தன்மை பண்ருட்டியில் அதிகாரிகள் ஆய்வு
/
குடிநீர் குழாய் தாங்கி பாலம் உறுதித்தன்மை பண்ருட்டியில் அதிகாரிகள் ஆய்வு
குடிநீர் குழாய் தாங்கி பாலம் உறுதித்தன்மை பண்ருட்டியில் அதிகாரிகள் ஆய்வு
குடிநீர் குழாய் தாங்கி பாலம் உறுதித்தன்மை பண்ருட்டியில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 06, 2025 01:58 AM

கடலுார்: பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் உள்ள குடிநீர் குழாய் தாங்கி பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வர கடந்த 1968ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் நிறைவேறாமல் இருந்தது.
ஜெ., முதல்வராக இருந்த போது, புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004ல் நிறைவடைந்தது. வீராணம் ஏரியில் இருந்து தனிக்குழாய் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.
வழியில் வடலுார் அருகில் உள்ள கொள்ளுக்காரன்குட்டை உள்ளிட்ட பல இடங்களில் நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை செல்லும் பல இடங்களில் குழாய் புதைக்கப்பட்டும், நீர்நிலைப் பகுதிகளில் குழாய் தாங்கி பாலம் அமைத்தும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
குறிப்பாக, கடலுார்-விழுப்புரம் மாவட்டங்களுக்கு இடையில் உள்ள பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பெண்ணையாற்று பாலத்தில் 43 ஜோடி பில்லர்கள் அமைத்து குழாய் தாங்கி பாலம் அமைக்கப்பட்டது. இது கடந்த காலங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக சுமார் 20 அடி அகலத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டு வெறும் பில்லர் மட்டும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை நேரடியாக கண்ரக்கோட்டை பாலத்தை வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து, குழாய் தாங்கி பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி அதிகாரிகள் கண்டரக்கோட்டையில் குழாய் தாங்கி பாலத்தை கடந்த ஒருவாரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
பில்லர்களில் பல இடங்களில் துளைபோட்டு, அதற்குள் இருக்கும் கான்கிரீட்டுகள், சிமென்ட் ஆகியவை உறுதித்தன்மையுடன் உள்ளதா என ஆய்வு செய்கின்றனர்.
இதே போன்று, பாலம் குழாய்களை தாங்கி நிற்குமா அல்லது மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் போது, ஏதாவது சேதம் ஏற்படுமா என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.