ADDED : நவ 28, 2026 08:14 PM
குள்ளஞ்சாவடி: சாலையோரம் நின்றிருந்த முதியவர், ஸ்கூட்டர் மோதி பலியானார்
குள்ளஞ்சாவடி அடுத்த பெரிய காட்டுசாகை, மெயின் ரோட்டை சேர்ந்தவர் செங்கான் மகன் சுப்பரமணியன், 75; இவர் இன்று (நவ.,28) மதியம் தெற்கு வழுதலம்பட்டு பகுதியை சேர்ந்த மகாராஜா, 35; என்பவருடன் கடலுார்– விருத்தாசலம், மெயின் ரோடு, பெரிய காட்டுசாகை பகுதியில் சாலையோரம் நடந்த மின்சார பணியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கடலுார் நோக்கி சென்ற, ஸ்கூட்டர் ஒன்று, இருவர் மீதும் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்த இருவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் முதியவர் சுப்பரமணியன் இறந்தது தெரிய வந்தது. மகாராஜா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
