/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒரே ஒரு ஊருல... ஒரே ஒரு வங்கி... : ஸ்ரீமுஷ்ணத்தில் மக்கள் அவதி
/
ஒரே ஒரு ஊருல... ஒரே ஒரு வங்கி... : ஸ்ரீமுஷ்ணத்தில் மக்கள் அவதி
ஒரே ஒரு ஊருல... ஒரே ஒரு வங்கி... : ஸ்ரீமுஷ்ணத்தில் மக்கள் அவதி
ஒரே ஒரு ஊருல... ஒரே ஒரு வங்கி... : ஸ்ரீமுஷ்ணத்தில் மக்கள் அவதி
ADDED : ஜன 03, 2024 12:32 AM
மத்திய மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் துவங்கி, அரசு மானிய தொகை, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊதியம், ஓய்வூதியமும் வங்கி மூலமே நடக்கிறது. இதனால் அனைவரும் அவசியமாக வங்கி கணக்கு துவங்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீமுஷ்ணம் நகரில், 40 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஒரே ஒரு தேசிய வங்கி மட்டுமே செயல்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம் நகரம் மற்றும் சுற்றியுள்ள 35க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இங்கு பரிவர்த்தனைகள் மேற்கொள்வதால், தினமும் திருவிழா போல் பொதுமக்கள் வங்கி வாசலில் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.
வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பொதுமக்களுக்கு வங்கி சேவை வழங்க முடியாமல் கதவை பூட்டிவிட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில், ஸ்ரீமுஷ்ணம் தனி தாலுகா, ஒன்றியம் என பிரிக்கப்பட்டு சுற்றுப்புற கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணத்திற்கு வருகை தருவது அதிகரித்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு நீதிமன்ற கிளை, துவங்கும் பணிகளும் நடந்து வருகிறது.
ஆனால் இத்தனை அரசு அலுவலகங்களும் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
மத்திய அரசு டிஜிட்டல் பண பரிவர்த்னைக்கு முன்னேறி செல்லும் நிலையில் கிராமப்புறங்கள் சூழ்ந்த இந்த பகுதியில் பணம் எடுக்கவும், கட்டவும் கியூவில் நிற்கின்ற நிலை தொடர்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, ஸ்ரீமுஷ்ணத்தில் மேலும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.