ADDED : ஆக 29, 2025 03:06 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை 6 மாதங்களுக்கு பிறகு சேர்மன் ஜெயந்தி திறந்து வைத்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் சரவணபுரம்,சோழவல்லி வி.ஏ.ஓ.அலுவலகங்கள் மற்றும் முள்ளிகிராம்பட்டில் ரேஷன் கடை கட்ட தலா 10 லட்சம் மதிப்பில் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்டது.
கடந்த 6 மாதத்துக்கு மேலாகியும் திறக்கபடாமல் இருந்தது. கடந்த வாரம் சேர்மன் ஜெயந்தி திறப்பதாக கூறியிருந்தனர்.
ஆனால் எம்.எல்.ஏ.தொகுதி நிதியில் கட்டபட்டதால் அவர் தான் திறக்க வேண்டுமென தி.மு.க.,கவுன்சிலர் சத்தியா கூறியதால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று திடீரென சேர்மன் ஜெயந்தி, துணைத்தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன் ஆகியோர் விழா ஏதும் நடத்தாமல் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தனர்.
இதுபற்றி கவுன்சிலர் சத்தியா கூறிய போது, நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்பதால் எனது வார்டில் வி.ஏ.ஓ.அலுவலகம் திறப்பது பற்றி எனக்கு தகவல் கொடுக்காதது தவறான செயலாகும் என கூறினார்.