/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
/
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
ADDED : ஜன 11, 2025 04:58 AM

கடலுார்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது.
பெருமாள் கோவில்களில், ஆண்டு தோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் திறக்கும் வைபவம் வெகு விமர்சையாக நடக்கிறது.
இந்த ஆண்டு நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடலுார் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது.
சிங்கிரிகுடி:
கடலுார் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மன் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது. காலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்,
கனகவல்லி தாயார் ஆண்டாளுடன் நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார். அப்போது, ராமானுஜர் எதிர்சேவை நடந்தது.
புதுப்பாளையம்:
ராஜகோபாலசாமி கோவில், திருப்பாதிரிபுலியூர் வரதராஜ பெருமாள் கோவில், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது.
அதிகாலையில் சிறப்பு பூஜை மற்றும் மார்கழி மாத பூஜை நடந்தது. தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயாருக்கு
மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து பரமபத வாசல் வழியாக எழுந்தருளினர். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில், அமைந்துள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாளுக்கு நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதனைத் தொடர்ந்து காலை 5:30 மணிக்கு ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன. பின்னர் உற்வச மூர்த்தி பார்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீஆண்டாள் சமேத தில்லைகோவிந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஸ்ரீமுஷ்ணம்:
பூவராகசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பையொட்டி நேற்று அதிகாலையில் மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 7.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், பூதேவி, ஸ்ரீதேவியோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமி வீதியுலா நடந்தது. தக்கார் மாலா,செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:30 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சொர்க்கவாசலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திட்டக்குடி:
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று சொர்க்க வாசல் திறப்பு விழாவையோட்டி நேற்று அதிகாலை 4:30 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி; 5:10 மணியளவில் சொர்க்க வாசல் (பரமபத வாசல்) திறப்பு விழா நடந்தது.
தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமி வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 8:00 மணிக்கு கருட சேவையில் வரதராஜ பெருமாள் பிரகார உலா நடந்தது.
ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.