/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் வளாகத்தில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு
/
கோவில் வளாகத்தில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு
ADDED : மார் 20, 2024 05:15 AM

திட்டக்குடி, : திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவில் வளாகத்தில், கோவில் ஆய்வாளர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தலையில் செங்கல்லை வைத்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவில் வளாகத்தில் கோவில்ஆய்வாளர் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக பணிகள் நடக்கிறது. அரசு விதிகளை மீறி கோவில் வளாகத்தில் கட்டடம் கட்டக்கூடாது என சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பை மீறி பணிகள் நடந்ததால், நேற்று மதியம் 12:00 மணியளவில் அகில பாரத சிவனடியார்கள் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், பா.ஜ., திட்டக்குடி நகர தலைவர் பூமிநாதன் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் தலையில் செங்கல்லை வைத்து கோவில் வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன், கட்டுமானப்பணிகள் நடந்த இடத்தைப்பார்வையிட்டு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பணிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கூட்டம் நடத்தி தீர்வு காண முடிவெடுக்கப்பட்டது. இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

