மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி துவக்கம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி துவக்கம்
ADDED : ஜன 17, 2026 06:32 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் 'தினமலர்' செய்தி எதிரொலியால் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி துவங்கியது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த மேல்நிலை நீரத்தேக்க தொட்டியிலிருந்து பழையபாளையம், மீனாட்சிபேட்டை தெரு, செட்டியார் தெரு, கடைவீதி, மலையாண்டவர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மேல்நிலை நீரத்தேக்க தொட்டி கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலானதால் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.
கீழே விழும் அபாயம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன் தொட்டி இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிராம மக்களுக்கு மோட்டார் மூலமாக நேரடியாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவில் குடிநீர் வழங்குவதில் சிக்கல் நீடித்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி துவங்கி நடந்து வருகிறது.
